Monday, March 16, 2009

தமிழ் சினிமாக் காமெடிங்ணா


தமிழ் சினிமாவுல நம்ம டாக்டர் விஜய் அளவுக்கு காமெடியா நடிக்கறவங்க யாருமில்லிங்ணா..!!! என்னடா இப்படிச் சொல்றேன்னு பாக்காதிங்ணா..!!

நம்ம கில்லி படம் வந்துச்சுங்களா..!!!?? நானும் எதாச்சும் கில்லி தாண்டு விளையாட்டு காமிய்ப்பாங்கன்னு பார்த்தேனுங்ணா..!!! ஆனா கபடி தானுங்ணா காமிக்கறாங்க..!!!

அதை விடுங்க...!!!!! அப்புறம் போக்கிரின்னு ஒரு படம் வந்துச்சுங்ணா...!! அதுல கூட ஹீரோ போலிஸா வருவாருன்னு சொன்னாங்ணா..!!

பார்த்தா யாரோ வாட்சுமேன் மாதிரில்ல கடைசியில் காமிக்றாங்ணா. நான் ரொம்ப நொந்துட்டேனுங்ணா.... ....!!!! ஆமாங்ணா...!!

மெய்யாலுமேங்ணா..!! அவரைப் பாத்தா போலீசுன்னு யாராச்சும் சொல்லுவாங்களாண்ணா???

அப்புறமுங்ணா அழகிய தமிழ் மகன் அப்படின்னு ஒரு படம் வந்துச்சுங்ணா...!!! நீங்க கூட பார்த்துருப்பிங்களே..!! அய்யோ..!! பாக்கலீங்களா..??? தப்பிச்சுட்டீங்கணா..!!!அதுலங்ணா அழகிய தமிழ் மகன் யாரு, யாருன்னு படம் முடியற வரைக்கும் தேடிப் பார்த்துட்டேனுங்ணா..!!! ஒருத்தரையும் காணோங்ணா..!! உங்களுக்காச்சும் தெரியுமான்னு கேக்கலாமுன்னு பார்த்தா நீங்க பாக்கலேன்னுட்டீங்கோ..!!!என்ன பண்றது நாம பெற்ற துன்பம், வையகத்துக்கு கிடக்காமப் போயிருச்சுன்னு என்ற மனசை ஆறுதல் படுத்திக்கிட்டேனுங்க...!!

இதெல்லாம் பரவால்லீங்ணா ..!!! லேட்டஸ்டா குருவி...!!!!!!!!, குருவி...!!! ன்னு ஒரு படம் வந்துச்சுங்ணா..!!! எதாச்சும் எங்கயாச்சும் உருவியாச்சும் படம் எடுத்துருப்பாங்கன்னு ஒரு நப்பாசையில் போயிட்டேனுங்க..!! குருவி படம் பார்க்க மக்களையே காணோமுங்ணா..!! சரி கெரவம் மக்களைக் காணோம், வேற யாராச்சும் ஸாரிங்ணா எதாச்சும் வருமான்னு பார்த்தேனுங்க....!!! நம்ம குருவியைப் பார்க்க ஒரு ஈ, காக்கா..!!!! கூட வரலீங்ணா..!!!!

அண்ணா ஒன்னு சொல்லிக்கிறேனுங்க..!! நான் சத்தியமா டாக்டர் விஜயைக் கிண்டல் பண்ணலீங்ணா...!!!!

உண்மையச் சொன்னேனுங்கோ..!! அம்புட்டுத்தேன்...!!!

Friday, March 13, 2009

இறுதிசவம் விழுவதற்குள்ளாவது

இந்தக் கட்டுரையை இணையத்தில் படித்திருக்கலாம். உங்களுக்கு மின்னஞ்சலில் கூட வந்திருக்கலாம். இருந்தாலும் என் ஆற்றாமையின் காரணமாகவே இதை மீண்டும் பதிகிறேன். ஈழத்தின் சகோதரிகளின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருக்கும் இந்நேரத்தில், உணர்வற்ற மக்களில் சிலராவது இதைப் பார்த்துப் புரிந்து கொண்டார்கள் ஆனால் எனக்கு மகிழ்ச்சி...!! மனதைத் திடப் படுத்திக் கொண்டு படிக்கத் தயாராகுங்கள்...!!!!


அப்பாவையும் அக்கம் பக்க உறவுகளையும் காவு வாங்கிய சிங்கள ராணு வத்துக்கு எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாது காப்பு வளையம் என்கிற பெயரில் என் போன்றவர்களைப் பாடாகப் படுத்துகிறார்கள் ராணுவத்தினர். கொஞ்சம் அழகாகப் பிறந்த பாவத் துக்காக, நினைக்கும்போதெல்லாம் குதறப்பட்ட என் தோழி, இப்போது சித்தப்பிரமை பிடித்துக் கிடக்கிறாள். ஆனா லும், ஆடை கிழிக்கும் வேலை மிச்சமென நினைத்து பிரமை பிடித்தவளையும் பிறாண் டுகிறது ராணுவம்!''

-மனிதநேயமுள்ள மருத்துவர் ஒருவர் மூலமாக வெடித் திருக்கும் ஈழப்பெண்ணின்குரல்
, நெஞ்சையே நொறுக்கிப் போடுகிறது. ராணுவத்தை நம்பிப்போன அப்பாவித் தமிழ் மக்களின் மொத்த நிலைமையும் விவரமாகச் சொல்லி அதிர வைக்கிறார்கள் கொழும்பில் இருக்கும் பத்திரிகையாளர் சிலர்.

'புலிகளுடனான போரை நடத்தும்போதெல்லாம் ராணுவம் போடும் வெறியாட்டங்களைத் தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் ராணுவத் தரப்பினர், எவ்வளவோ வற்புறுத்தியும் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்ட வளையப் பகுதிக்குச் செல்லவில்லை. இந்தக் கடுப்பில் கொத்து குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி, மக்களை உயிர் பயத்தில் ஓடவைத்தது ராணுவம்.

இதனால் வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தின் முகாம்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சோதனை முடிந்து அனுப்பப்படுபவர்களை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று பிரிக்கிறார்கள். ஆண்களை யும், பெண்களையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக மாறிக்கிடக்கும் தமிழ் தலைவர்கள் சிலருடைய ஆதரவாளர்கள் விசாரிக்கிறார்கள். சந்தேகப்படும்படி அவர்கள் யாரையெல்லாம் குறித்துத் காட்டுகிறார்களோ... அவர்களுக்கெல்லாம் அடுத்த சில நிமிடங் களிலேயே முடிவு கட்டுகிறது ராணுவம்.

மக்களோடு மக்களாகப் புலிகள் ஊடுருவி கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பகுதிகளில் மரப்பொந்து களிலும் மண்ணுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மூலமாக ராணுவம் மற்றும் சிங்கள அரசில் இருக்கும் முக்கிய ஆட்களைக் கொன்றுவிடுவார்களோ என்கிற அச்சத்தில்தான் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்களை இந்த ஆராய்ச்சி வேலையில் இறக்கியிருக்கிறது ராணுவத் தரப்பு. இளைஞர்கள் எந்த விசாரணையும் இன்றியே ரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இளம்பெண்களின் நிலையைச் சொல்ல வேண்டியதே இல்லை. ராணுவத்தின் வல்லுறவுக்கு உடன்படாமல் வீம்பு காட்டும் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்நடத்தப்படுகிறது. அவர்களை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்காமல் நடத்தப்படும் சித்ரவதைகளை ராணுவத்தில் இருக்கும் ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளே மீடியாக்களிடம் சொல்லி வருந்தி இருக்கிறார்கள்.
இதற்கிடையில், தமிழ்ப் பெண்களை வற்புறுத்திப் புணர்வதைக்கூட இரக்கமேயில்லாமல் வீடியோ பதிவும் செய்கிறார்கள். இத்தகைய வீடியோ பதிவுகள் யாருக்கு எதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கிறது. ராணுவ வீரர்கள் செய் வதைக் காட்டிலும், தமிழ்ப் பெண் களைப் பெரிய அளவில் சித்ரவதை செய்வது ராணுவத்தின் உளவுத் துறையில் இருக்கும் சிலர்தான்.

அவர்கள் தங்கள் முகாம்களில் எடுபிடி வேலைகள் செய்யவும், விரும்பும்போதெல்லாம் இச்சை களைத் தீர்த்துக்கொள்ளவும் இளம்பெண்களைப் பயன் படுத்துகிறார்கள். உளவுத் துறையின் வெறியாட்டத்துக்கு இரையாகி, பலியான பெண்களில் பலரும் எரிக்கப்பட்டு விடுகிறார்கள்.



உலக நாடுகளிடம், 'எங்களை நம்பி வந்த மக்களுக்குத் தரமான உணவும் மருந்துப் பொருட்களும் வழங்குகிறோம்!' என்று சொல்லும் சிங்கள அதிகாரிகள், உண்மையில் வெறித்தனத்தைத் தவிர, வேறெதையும் தமிழ் மக்களிடம் காட்டவில்லை. இத்தகைய கொடுமைகளை ராணுவம் செய்வது பற்றி சிங்கள மக்களுக்குக்கூடத் தெரியாது. மருத்துவர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் மூலமாக வெளிவந்திருக்கும் இத்தகைய கொடூரங்கள், இரக்கமுள்ள சிங்கள மக்களிடமும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக் கிறது!'' என்கிற கொழும்பு பத்திரிகையாளர்கள்,

''தற்காலிக விடுப்பிலிருக்கும் ராணுவ வீரர்கள், இளம் பெண்களின் கற்பைச் சூறையாடி, அவர்களின் உறுப்புகளை அறுத்து எறியும் அவலமும் நடக்கிறது. வவுனியா மற்றும் விசுவமடு பகுதிகளில் இருக்கும் இடைத் தங்கல் முகாம்களில் தமிழ்ப் பெண்கள் எந்தளவுக்கு சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று நேர்மையான ராணுவ அதிகாரிகளே எங்களிடம் சொல்கிறார்கள். ஐ.நா-வின் பிரதிநிதியாக அந்த இடைத் தங்கல் முகாம்களுக்கு வந்த ஜான் கோல்ம்ஸின் கவனத்துக்கு அத்தகைய கொடூரங்கள் கொண்டு செல்லப்பட்டும், இலங்கையின் நிவாரண அமைச்சரான ரிஷாட், அதை திசைதிருப்பி, மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறைத்துவிட்டார்...'' என்றார்கள்.

இதற்கிடையில், இந்திய பிரதமருக்கு ஈழப்பெண்களின் பரிதாபகரமான நிலை குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்பைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் அவசரக் கடிதம் எழுதி யிருக்கிறார். அதில், ''வவுனியா மருத்துவமனையில் தமிழ் கர்ப்பிணிகளை வற்புறுத்திக் கருவைக் கலைக்கிறார்கள். இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றச் சொல்லி மருத்து வர்களையும் ராணுவம் மிரட்டுகிறது. மொத்தத்தில், தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து ராணுவம் நடத்தும் வெறியாட்டம், ஹிட்லர் காலத்தில்கூட நடக்காதது!'' என்று சொல்லவொண்ணா வேதனையோடு கலங்கி யிருக்கிறார்.

இறுதி சவம் விழுவதற்குள்ளாவது உலகத்தின் இரக்கப்பார்வை ஈழத்தின் பக்கம் விழுமா?

இந்தக் கட்டுரையைப் படித்த மாத்திரத்தில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருடைய இதயமும் துடித்திருக்கும். அதுவும் தமிழனாய்ப் பிறந்த ஒரே காரணத்துக்காக இனப் படுகொலை நடக்கும் இடங்களைப் பற்றிய படங்களும் , கட்டுரைகளும் , காணொளிப் படங்களும் வந்தும் இன்றைய தமிழக அரசியல்வாதிகள் பல்ர் அதை வியாபாரமாக்குவதிலேயே குறியாய் இருக்கின்ற அவல நிலை தான் உச்ச பட்சக் கொடுமை..!!

முத்துககுமார் முதலான இளைஞர்கள் தீக்குளித்து மாண்டாலும், மாணவர்கள் முதல் வழக்குரைஞர்கள் வரை ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற போராட்டத்தைத் தொட்ர்ந்து நடத்திய வண்ணம் இருந்தாலும், இன்றைய மாநில, மத்திய அரசுகள் வாளாவிருக்கின்றன்.

தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே காங்கிரஸிக்கு கூஜா தூக்கும் புதிய தேர்தல் கமிஷனரின் ஆணைப் படி, ஈழப் பிரச்னை பற்றிப் பேசக் கூடாது என்று அறிவிப்பு வருகிறது.

மும்பை குண்டு வெடிப்பு பற்றிப் பேசக் கூடாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததா என்று தெரியவில்லை.

இதெற்கெல்லாம் ஒரே வழி ஆட்சி மாற்றமே. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். அது போல் இந்தியாவில் நடக்கப்போகும் ஆட்சி மாற்றமே, சிங்களப் பேரினவாத ஆதிக்கத்தை அழிக்க உதவ வேண்டும். அது காங்கிரஸ் அரசுக்கு சம்மட்டி அடியாக வேண்டும் .

மௌனப் புரட்சியாய் வரும் தேர்தலை நம் தமிழக மக்கள் உருவாக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாமல் மண் கவ்வச் செய்ய வேண்டும்.

இது தான் இது நாள் வரை எந்தப் போராட்டங்களிலும் ஈடுபடாமல், ஆனால் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை உள்ள தமிழகச் சகோதர, சகோதரிகள் செய்யவேண்டியது......!!!!!!!!!!!!!!!!!!

i

Wednesday, March 11, 2009

என்னா அடி..???


இன்னிக்கு இந்தியா நியூசிலாந்து போட்டியை யாரு மறக்கறாங்களோ இல்லியோ, நியூசிலாந்து வீரர்கள் ஆயுளுக்கும் மறக்க மாட்டாங்க...!!!! என்னா அடி..!!! வீரேந்திர சேவக் ஆடிய ஆட்டம் இருக்கே, கொக்கமக்கா என்னமா போட்டு தாக்கினாப்ல்..!! பய புள்ளை கொஞ்சம் கூட இரக்கமில்லாம நியூசிலாந்து பயபுள்ளைகளை கொன்டெடுந்து, பென்டெடுத்து, பெடலடுத்துப் புட்டாப்ல..!!!!!

2 நாள் முன்னாடித் தான் நம்ம ஓல்ட் ஈரோ டெண்டுல்கர், திடீர்னு ரஜினி சந்திரமுகி ஹிட் குடுத்த மாதிரி, பழைய ஆட்டத்தை ஆடி அடங்கினாப்ல..!! அதுக்குள்ள இந்த சேவக் பய வெளுத்து வாங்கிட்டாப்ல.

நம்ம ஓட்டேரி நரி ஸாரிங்க வெட்டோரிக்கு நேரஞ்சரியில்ல போல...!!! மாறி மாறி இந்திய அணி அடிக்கற அடிக்கு, பெத்த புள்ளையைப் பாக்கற சந்தோசம் கூட முழுமையடையாமப் போச்சு. என்ன ஆச்சுப்பா இந்திய அணிக்கு..?? சோனி டீமா இருந்த அணி டோனி டீமா மாறினதும் வெற்றி குமியுதேப்பா..??


என்னடா இம்புட்டு நாளா, இந்திய அரசியல், ஈழப் பிரச்னை, கலைஞர், செயலலிதான்னு பேசிட்டு இருந்த பய, இந்த வீணாப் போன கிரிக்கெட்டைப் பத்திப் பேசறானேன்னு நம்ம பிளாக்கீஸ் எல்லாம் பாக்கறாங்க்ன்னு தெரியும்..!! இன்னா பண்றது..?? இன்னிக்கு நாயடி அடிச்ச சேவக்கை ஒரு ரசிகனாய்ப் பாராட்ட இந்த பக்கத்தை ஒரு சாக்கா வெச்சுகிட்டேன் அம்புட்டுத்தான்.

Tuesday, March 10, 2009

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே

ஈழத்தில் நடக்கும் படுகொலைகளை விட, இந்தத் தமிழ்நாட்டில் அரசியல் வியாபாரிகளான, அதிமுக, திமுக கூட்டங்கள் நடத்தும் ஜனநாயகப் படுகொலை நாடகங்கள் உச்சத்தை அடைந்து வருகின்றன.

ராமச்சந்திராவில் படுத்துக் கொண்டே ஒரு புதுப் பேரவையை ஆரம்பித்துத் தனி ஆவர்த்தனம் நடத்தினார் கலைஞர். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் ஈழத் தமிழர் துயரம் துடைக்க உண்ணாவிரதமிருக்கிறார் ஜெயலலிதா. எல்லாம் தேர்தல் என்னும் சாத்தான் செய்யும் வேலை.

போர் நடக்கும் போது பொதுமக்கள் இறப்பது சாதாரண விஷய்ம் தான் என்று பேசிய அம்மையாருக்குத் திடீரென ஈழத்தமிழர் மீது பாசம் பொத்துக் கொண்டு வந்த காரணமென்ன?? எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறைப்படி ஈழத்தமிழரைக் கொல்லும் வேலைக்கு விளக்குப் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு, சாமரம் வீசும் கலைஞரை எதிர்ப்பதற்காக உருவான தீடீர் ஈழப் பாசம்.
தமிழினத் தலைவர் என்று அழைத்துக் கொள்பவரே ஈழ விஷயத்தில் வாளாவிருக்கின்றார். பதவி என்ற உணர்வு, தமிழுணர்வை அடித்துச் சாப்பிட்டு விட்டது. ஸ்பெக்ட்ரம் க்தைகளால், இன உணர்வு மரத்துப் போய் விட்டது.

என் சகோதரர்கள் அங்கே அடிபட்டுக்கொண்டும், மிதிபட்டுக் கொண்டும் சாகக் கிடக்கிறார்கள். அந்த உணர்வை வைத்துக் கொண்டு இங்கு அரசியல் நடத்திக் காசு பார்க்கும் கூட்டமாகத்தான் தமிழக அரசியல் வியாதிகள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் வசூல் செய்த பணம் எங்கு , எப்படி ஈழத் தமிழரைப் போய்ச் சேர்ந்தது என்று ஆர்ப்பாட்டம் செய்த அம்மையார், இன்று நிதி வசூல் செய்கிறார், அதே ஈழத் தமிழரைக் காக்க...!! கேட்பவன் கேனையாய் இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகும் என்பார்களே அது போல...!!!!


இத் தமிழ்நாட்டின் சாபக் கேடு இது....!!!!

Thursday, January 15, 2009

நம்மால் முடியும்


நம்மால் முடியும் என்ற வார்த்தையே நம்பிக்கையின் ஒளிக்கீற்று . அதைத் தாரகமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் தான் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்திஅவர்களின் மக்கள் சக்தி இயக்கம் . அதை அவர்கள் சொல்லும் விதமே மிக அழகாக இருக்கும். இது ஒரு சாதரண சமூக இயக்கமோ, அல்லது அரசியல் இயக்கமோ அல்ல. நல்லதொரு "சமூக மாற்றத்துக்கான அரசியல் இயக்கம்"என்று தான் கூறுவார்கள்.


நம் இயக்கத்தில் பல நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இணைந்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சமூக மாற்றத்துக்கான ஒரு பரந்து பட்டு விரிந்த கனவு ஒன்று இருக்கிறது. சமூகச் சிந்தனையுள்ள ஒரு இளைஞர் கூட்டம் பலவித கனவுகளுடன் இதை முன்நடத்திச் சென்று கொண்டிருக்கிறது.
"
மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும் , மக்களை அதிகாரப்படுதும் அரசியலை முன்னிறுத்திச் " செல்லும்
இயக்கமாக அது வளர்ந்து கொண்டிருக்கிறது. டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பெயரில் பலவித சமூக முன்னேற்றத்துக்கான பணிகளை அவர்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். இந்த அருமையான இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

1988ம் ஆண்டு திரு. எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம், "சுயமுன்னேற்றம், சுயபொருளாதார முன்னேற்றம் சமூக ஈடுபாடு போன்ற தனி மனித உயர்விற்கான லட்சியங்களையும், நதிநீர் இணைப்பு, கிராம வேள்வி, புதிய கல்வித்திட்டம் போன்ற சமூக முன்னேற்றத் திட்டங்களை முன்னிறுத்தி ஒரு அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாக விளங்கியது.
இரண்டு ஆண்டுகளாக இயக்க நிறுவனர் டாக்டர். திரு, எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களது வழிகாட்டுதலுடன், இயக்க முன்னோடிகளின் ஆதரவுடனும் முழுக்க முழுக்க இளைஞர்களாலேயே நடத்தப் பட்டு வருகிறது. முழுநேர நிர்வாகிகளாக, பல்வேறு தளங்களில் பணியாற்றிய இளைஞர்கள் இணைந்து, கொள்கை வகுப்பது திட்டமிடுவது மற்றும் செயல் படுத்துவது என எதிர்காலத் தூண்களான இளைஞர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.
மக்கள் சக்தி இயக்கத்திலிருந்து "நம்மால் முடியும்" என்ற சமூக மாற்றத்திற்கான பத்திரிகை ஒன்று மாதம் ஒருமுறை வந்து கொண்டிருக்கிறது. இதை அனைத்துப் பக்கத்திலும் நிர்வகிப்பது இளைஞர்களே...!!!!

























Thursday, November 13, 2008

சட்டக் கல்லூரியா ? கொலைக் கல்லூரியா?


இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சட்டக் கல்லூரிக் கலவரங்களைப் பார்த்த எந்த ஒரு மனிதனும் காவல்துறையைத் திட்டாமல் இருந்திருக்க முடியாது. மனிதனுள் எந்த அளவு மிருகத்தன்மை இருக்கின்றது என்பதற்கு இது ஒரு அபாயமான எடுத்துக்காட்டு .

ஜாதி வெறி இன்றும் எந்த அளவு மாணவர்களிடையே ஆட்கொண்டுள்ளது என்று தெளிவாகத் தோலுரித்துக் காட்டிய கொடுமையான காட்சிகள் கண்டும் காணாமல் இருந்தா காவலர்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்திருக்கவேண்டும் . செய்யாமல் விட்டது அரசு செய்த தவறு.
இவ்வாறு கலவரம் நடக்கப்போகிறது என்று முன்னமே கல்லூரி நிர்வாகத்திடம் அறிவித்ததாக காவல் துறை சொல்கிறது . அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று fallow செய்திருக்க வேண்டிய கடமையை ஏன் செய்யாமல் விட்டது..??

இந்த நிகழ்வை ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவு சாதி வெறி மனதில் ஊறி
இருக்கின்றது இன்றைய மாணவர்கள் மனதில் என்று பார்க்கும் பொழுது, பெரியார் சமூக நீதிக்காக உழைத்த உழைப்பு விழலுக்கு இழைத்த நீராய்ப் போனதோ என்ற ஐயப்பாடு என் மனதில் எழுகிறது. அவர் சொன்ன ஆதிக்க மனப்பான்மை மனோபாவத்தைக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மட்டும் காட்டிவிட்டு, அமைதியாகி விட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது.

சட்டமேதை அம்பேத்கர் பெயரில் உள்ள அந்தக் கல்லூரியில் நடந்த கலவரம் கலைஞர் ஆட்சியில் ஒரு கரும்புள்ளி என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கலவரம் மேலும் மற்ற சட்டக் கல்லூரிகளுக்கும் பரவாமல் தடுத்து கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பு மாணவர்கள் மீது தீவிர நடவடிக்கையை அரசுத்தரப்பு எடுக்காவிடில் எதிர்காலப் பிழையாய் போகும் .
அதற்குள் கோவை சட்டக் கல்லூரியில் கலவரம் நடக்க ஆரம்பித்து விட்டது.
இவ்வாறு மாணவர்கள் மனதில் நஞ்சு கலந்து விட்டு, எல்லோரும் சமத்துவம், சக்கரைபொங்கல் என்று பேசுவதில் பெரியார் மொழியில் சொன்னால் ஒருவெங்காயத்துக்கும் uthavaathu

Thursday, October 23, 2008

என்ன தான் செய்யப் போகிறீர்கள் கலைஞர் அய்யா அவர்களே ..??

முன்னாள் பிரதமர் ராஜீவ் அவர்களின் கொலைக்குப் பிறகு, மறந்தும் கூட ஈழ ஆதரவு நிலை எடுக்காத கலைஞர் அவர்கள், மத்திய அரசின் ஆயுள் முடியக் கூடிய இந்நேரத்தில் திடீரென ஈழஆதரவு திலகமாய் மாறிப்போனார் . உடனே கலைஞர் அனுதாபிகள் ஓடி வருவார்கள்...!! தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கற்பா பாடினார் என்று ..!! அடுத்த நாளே தமிழ்செல்வனை மறைவிற்கு இர ங் கக்கூட்டம் நடத்தியதை தடுத்ததை வசதியாக மறந்து போவார்கள்...!!

இதோ இப்போது கூட, இத்துணை நாள் வராத சோகமும், துக்கமும், அய்யா மனதை திடீரென எப்படி ஆழமாய் தைத்ததோ தெரியவில்லை, ஈழத்தமிழரை ஆதரிக்க வந்தார். சரி வரவேற்போம். என் சகோதரனுக்கு எங்கிருந்து ஆதரவு வந்தாலும் சரி என்று.

முதலில் எல்லோரும் தந்தி அடியுங்கள் என்றார். சரி, அடிக்கலாம்னு சந்தோஷப் பட்டோம். ஆனால் ஒரு கேள்வி அடி மனசில் தொத்திகிட்டு நின்னுச்சு..!! நம்மளைத் தந்தி அடிக்க சொன்னவர், மத்திய அரசுக்கு, " அப்பு..!! இலங்கை அரசுக்கு உதவி பண்றதை நிறுத்துங்க, இல்லாங்காட்டி, நான் ஆதரவை வாபஸ் பெறுவேன் அப்படின்னு ஒரு தந்தி அடிச்சிருக்கலாமேன்னு...!!!

கொலை பண்ணினவன், கொள்ளை அடிச்சவன் எல்லாம் மத்திய அரசை மிரட்டி பதவி வாங்கறப்ப, இது உணர்வுப் போராட்டமாச்சே ..!! தமிழா இன உணர்வு கொள் அப்படின்னு நமக்கெல்லாம் சொன்னவரு, ஒரு வாயும் திறக்கலை...!!

முன்னாடியே, இலங்கை கடற்படை கடத்திட்டு போன மீனவர்களை, புலிகள் தான் கடத்தினாங்கன்னு ஒரு டிராமா ஓடிச்சு, அப்பயும் நம்ம கலைஞர் தான் முதலமைச்சருங்கோ..!!! அப்பஎல்லாம் வராத ஈழ பாசம், திடீர்னு அம்மையார், ஈழ மக்கள் கொலையை எதிர்த்து அதிசயமாய் ஒரு அறிக்கை விட்டதும், குபுக்கடீர்னு எழுந்து வந்துச்சு..!!! ஆஹா, இந்த ஒன்னுலயும் இந்த அம்மா ஆட்டயக் குழப்பிடுமொன்னு ..!!

அந்த அம்மா புத்தி இரண்டு நாலா வெளுத்துப் போச்சுன்னு வச்சுக்கங்க..!!

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டினார் ..!!! அம்மா வழக்கம் போல வரலை. வைகோவும் வரலை..!! அப்பக் கூட திறமையாக தன் சாமர்த்தியத்தைக் காண்பித்தார். மனித சங்கிலி போராட்டம்னு அறிவிச்சார். இயற்கை வேற ஹெல்ப் அவருக்கு.!!! மழை..!!! மழையினால் கூட்டம் ஒத்தி வைப்புன்னு போட்டார் பாருங்க ஒரு பிரேக் ..!!

அங்க நம்ம சகோதரன் குண்டு மழையில் செத்துட்டு இருக்கான், இங்க இந்த மழை என்னங்க பண்ணும். சரி இரண்டு நாளில் போராட்டம் நடக்கும்னு சொல்லிட்டார்னு சந்தோஷப் பட்டோம்.
ஆனால் அன்னிக்கு ஈழத் தமிழர் நிலைக்க்காகப் பேசின சற்று உணர்ச்சிப் பூர்வமாய்ப் பேசின வைகோவைக் கைது செய்துட்டார். சட்டம் தன் கடமையைச் செய்யும்னு..!!

அடுத்த நாளே திரைக் கலைஞர்கள் கூடத்தில் பேசின அமீரும், சீமானும் கைது செய்யப் பட்டார்கள்.

சரி, கலைஞர் எதோ பிரஷர்ல இருக்கார் போல...! இருபது ஒன்பதாம் தேதி தன் வீரத்தை வெளிப் படுத்திடுவார்னு வழக்கம் போல எல்லா இனாவானா தமிழன் போல நானும் காத்திட்டு இருந்தேன். பிரணப் முகர்ஜின்னு ஒரு அமைச்சர் வந்துட்டு, "நாங்க சொல்லிட்டோம், அவங்க சரின்னு சொல்லிட்டாங்க, நீங்க ரிசைன் பண்ண வேண்டாம், என்ஜாய் னு சொல்லிட்டு போய்ட்டார். நம்மாளும் ராஜினாமாவை ஒத்தி வச்சுட்டாராம்.

அய்யா கலைஞர் அவர்களே..!!! அங்கிருக்கும் தமிழன் உங்களிடம் நிதி உதவி கேட்க வில்லை...!! உங்கள் உணர்வுகளால், உதவுங்கள், எங்கள் மண்ணைக்காக்க உதவுங்கள் என்று தான் கேட்கிறான். ஆனால் உங்கள் இல்லத்தின் வாசலில் நின்று கொண்டே, அயலுறவுத்துறை அமைச்சர், இலங்கைக்கு ஆயுத உதவி நிறுத்த முடியாது என்கிறார். நீங்களும் வாளாவிருக்கிறீர்கள்..!!

இன்று பிச்சை எடுக்கும் போராட்டத்தை அல்லவா தொடங்கி இருக்கிறீர்கள்...!!!

உங்களை இன்னும் தமிழுனர்வுக் காவலராய் எண்ணி ஏமாந்து கொண்டிருக்கும் எங்களைப் போன்ற கோடானு கோடித தமிழர்களை இன்னும் ஏன் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்..??

தங்கள் பதவி என்னும் துண்டைக் காப்பாற்றிக் கொள்ள, எங்கள் தமிழர்களின் வேட்டியை உருவினால் பரவாயில்லை, உயிரை அல்லவா உருவும் கும்பலுக்கு துணை போகிறீர்கள்..??

அந்த அம்மையைப் போல் உணர்வற்ற தன்மை, உங்கள் துரோகத்துக்கு எவ்வளவோ பரவாயில்லை..!!

அவர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள் என்று எங்களுக்கு நிதர்சனமாய்த் தெரியும்...!! ஏமாற மாட்டோம்..!!

தன்மானத் தமிழர் என்றல்லவா இன்றுவரை உங்களுக்கு கூஜா தூக்கியவர்கள் கூட, வெட்கித் தலை குனியும் நிலைக்கு ஆளாக்கி விட்டீர்கள்..!!!

இலவசம் என்னும் மாயையை மட்டும் வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாள்..???

வயோதிகம் என்ற நோயில், உணர்வுகளையுமா மொத்தமாய் இழக்க வைத்து விட்டது..??

பதவி என்பது துண்டு என்றீர்களாம்..!! இன்றோ அங்கே தமிழன் தலை துண்டானாலும் எனக்கு முக்கியம் பதவி என்கிறீர்கள்..!!

ஆட்சி பறிபோய்விடும் என்ற பயம் என்றால்..!! நீங்கள் தமிழனிப் புரிந்து கொண்டது அவ்வளவுதானோ..??

மீண்டும் அவன் உங்களுக்குத தேர்தலில் ஓட்டளிக்க மாட்டானா??

தங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்...!!

இன்னும் எங்களைப் போல் பல பேர் உங்களை தமிழர் தலைவராகத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..!! உங்கள் நிஜ முகம் வெளிப்பட ஆரம்பித்தால், ஒரு தமிழனாய் பிறந்தவன் கூட உங்களுக்கு ஓட்டளிக்க வெட்கப் படுவான் என்பது திண்ணம்...!!

இங்ஙனம்

இன்னும் உங்களை நம்பும்

தமிழ்க் குடி மகன்