Tuesday, March 10, 2009

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே

ஈழத்தில் நடக்கும் படுகொலைகளை விட, இந்தத் தமிழ்நாட்டில் அரசியல் வியாபாரிகளான, அதிமுக, திமுக கூட்டங்கள் நடத்தும் ஜனநாயகப் படுகொலை நாடகங்கள் உச்சத்தை அடைந்து வருகின்றன.

ராமச்சந்திராவில் படுத்துக் கொண்டே ஒரு புதுப் பேரவையை ஆரம்பித்துத் தனி ஆவர்த்தனம் நடத்தினார் கலைஞர். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் ஈழத் தமிழர் துயரம் துடைக்க உண்ணாவிரதமிருக்கிறார் ஜெயலலிதா. எல்லாம் தேர்தல் என்னும் சாத்தான் செய்யும் வேலை.

போர் நடக்கும் போது பொதுமக்கள் இறப்பது சாதாரண விஷய்ம் தான் என்று பேசிய அம்மையாருக்குத் திடீரென ஈழத்தமிழர் மீது பாசம் பொத்துக் கொண்டு வந்த காரணமென்ன?? எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறைப்படி ஈழத்தமிழரைக் கொல்லும் வேலைக்கு விளக்குப் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு, சாமரம் வீசும் கலைஞரை எதிர்ப்பதற்காக உருவான தீடீர் ஈழப் பாசம்.
தமிழினத் தலைவர் என்று அழைத்துக் கொள்பவரே ஈழ விஷயத்தில் வாளாவிருக்கின்றார். பதவி என்ற உணர்வு, தமிழுணர்வை அடித்துச் சாப்பிட்டு விட்டது. ஸ்பெக்ட்ரம் க்தைகளால், இன உணர்வு மரத்துப் போய் விட்டது.

என் சகோதரர்கள் அங்கே அடிபட்டுக்கொண்டும், மிதிபட்டுக் கொண்டும் சாகக் கிடக்கிறார்கள். அந்த உணர்வை வைத்துக் கொண்டு இங்கு அரசியல் நடத்திக் காசு பார்க்கும் கூட்டமாகத்தான் தமிழக அரசியல் வியாதிகள் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் வசூல் செய்த பணம் எங்கு , எப்படி ஈழத் தமிழரைப் போய்ச் சேர்ந்தது என்று ஆர்ப்பாட்டம் செய்த அம்மையார், இன்று நிதி வசூல் செய்கிறார், அதே ஈழத் தமிழரைக் காக்க...!! கேட்பவன் கேனையாய் இருந்தால் கேப்பையில் நெய் ஒழுகும் என்பார்களே அது போல...!!!!


இத் தமிழ்நாட்டின் சாபக் கேடு இது....!!!!