Tuesday, October 19, 2010

விடி வெள்ளி ஒரு அறிமுகம்

இணையத்தில் உலா வரும் போது எனக்கு நண்பர்களைப் பெற்றுத் தந்ததில் ஆர்குட் இணையதளத்துக்குப் பெரும் பங்கு உண்டு..!! ஆர்குட் இணையதளத்தில் "தமிழக் அரசியல் குழுமம்(TNP)" என்ற குழுமம் மூலம் தமிழக அரசியல்பேசினோம்....!! அரசியல் தாண்டி நட்பு பேசினோம்..!! ஒரு அழகிய நட்பு வட்டம் உருவானது..!! ஒரே சிந்தனைகள் உள்ள பலரும் இணைந்த போது, அரட்டை தாண்டி சமூகப் பொறுப்புடன் ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் எங்களுக்கிடையே உருவானது...!!

அதே சமயத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள பொம்மிக் குப்பம் என்ற மலையடிவார கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்காக அந்த ஊர் மக்கள் முயற்சி செய்வதையும், அதற்கான முயற்சியில் உதவி செய்ய உதயமூர்த்தி அவர்களின் மக்கள் சக்தி இயக்கத்தினர் இணைந்திருப்பதையும் அறிந்தோம். TNP என்ற ஆர்குட் குழுமத்தின் மூலம் அந்தப் பணியில் எங்களையும்

இணைத்துக் கொண்டோம். அவர்களுக்குத் தேவையான பண உதவிகளைச் செய்தோம்.

http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=7222740&tid=2582393196078992381&kw=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

இந்தப் பணியின் உந்துதல் காரணமாக

"ஆயிரம் ஏழைகளுகு உணவளிப்பதை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் இறைமைக்கு ஒப்பானது" என்ற கூற்றுக்கு ஏற்ப, சமூகத்தில் படிக்க ஆர்வமிருந்தும் வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு உதவலாம் என்ற கருத்தை முன்வைத்துக் களமிறங்கத் தீர்மானித்தோம்.

அப்போது தான் ஈழத்தில் பிறந்து, போர்க் காரணங்களால் அகதி என்ற பெயர் சூட்டி, முகாம்களில் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும், நம் தொப்புள்க் கொடி உறவுகளில் பலர் ஆர்வமிருந்தும், ஆசையிருந்தும், அரசு சலுகைகள் ஏதுமில்லாத காரணத்தினாலேயே, மேல்நிலைக் கல்வியை எட்டாக் கனியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்றறிந்தோம்.

ஈழத்தை மீட்டெடுக்கப் போர்முனை தான் செல்லவில்லை..!! நம் ஏதிலி சகோதர, சகோதரிகளில் ஓரிருவரின் சீர்மிகு கல்வியில் சிறு பங்காற்றுவோமே என்று முடிவெடுத்து உருவான ஒரு அரசு சாரா அமைப்பு தான் " விடி வெள்ளி"

விடி வெள்ளி

கும்மிடிப் பூண்டி ஏதிலி முகாமிலிருந்து இரு ஆர்வமிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கல்வி உதவி செய்யத் திட்டமிட்டோம். அவ்வாறே தேர்ந்தெடுத்து முதலாம் ஆண்டு உதவிகளைச் செய்தோம். இது சிறு விதையாய் ஜீலை 2009ல் ஊன்றப்பட்டது, இன்று சிறு செடியாய் முளைத்திருக்கிறது....!!!

இணையத்தின் நண்பர்களாய் இணைந்த பலர் கை கொடுத்தனர்...!! முதலாம் ஆண்டுக்கான தொகை கட்டப் பட்டது. இரண்டு மாணவர்களோடு தொடங்கிய எங்கள் முயற்சி, கல்வி ஆர்வத்தால் கோரிக்கை வைத்த மேலும் இரண்டு மாணவர்களோடு நான்காய் உயர்ந்திருக்கிறது..!!

நிரஞ்சன், புவனேஸ்வரி, பிரதீபா,ஷோபனா என்ற நான்கு பிள்ளைகளின் இரண்டாம் ஆண்டுக்கான கட்டணங்களுக்கான காலம் தொடங்கியிருக்கிறது...!! வழக்கம் போல் சென்ற ஆண்டு உதவிட்ட நண்பர்களும் இந்த ஆண்டு உதவிகள் செய்யத் தொடங்கி விட்டனர். சென்ற ஆண்டு இரண்டு மாணவர்கள் பயன் பெற்றதால் அவர்களுக்கான உதவி நண்பர்களின் வட்டத்தில் மிக எளிதாக இருந்தது. இப்போது நான்கு மாணவர்களாய் உயர்ந்திருக்கும் இவ்வமைப்பின் வட்டம் விரிவு படுத்தப் படவேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே நம் விடிவெள்ளியின் அறிமுகம்....!! இரண்டு பேருக்கான உதவி நான்காய் உயர்ந்தது போல , நான்கு, நாற்பதாய், நாற்பது, நானூறாய் உயரவேண்டும் என்ற மாறாத ஆசையில் உங்களிடையே இந்தப் பதிவை எழுதுகிறேன்..!!

விடி வெள்ளி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்பு..!!! சில நண்பர்கள் வட்டத்தோடு ஆரம்பிக்கப் பட்ட இவ்வமைப்பில் நம் முக நூல் அன்பர்களும் இணையவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...!!

முகநூலில் கூட விடி வெள்ளிக்கான இணையப் பக்கத்தைத் தொடங்கியிருக்கிறோம்..!!

http://www.facebook.com/group.php?gid=146680245353864

ஊர் கூடித் தேர் இழுக்கலாம் என்று கூறுவார்கள்..!! இணையத்தால், இதயத்தால் இணைந்திருக்கும் நாம் இது போன்ற சமூகச் சிந்தனைகளிலும், கை கோர்ப்போம்..!!

உங்களின் தோள் வேண்டும் தோழனின் சிறு மடல்..!!