சில நாட்களுக்கு முன் மதுரைக்கு ஒரு திருமணத்திற்குச் சென்று வரவேண்டியிருந்தது. அதனால் ரயிலில் டிக்கெட் புக் செய்து மிடில் பெர்த் கிடைத்தது. பல நாட்கள் நான் ரயிலில் பயணம் செய்திருந்தாலும், மிடில் பெர்த்தில் பயணம் செய்ததே கிடையாது. அதிக தடவை அப்பர் பெர்த் அல்லது லோயர் பெர்த்தில் தான் பயணம் செய்திருக்கிறேன்.
இந்த முறை தான் மிடில் பெர்த். எல்லா பெர்த்திலும் சுகமானது அப்பர் பெர்த் பயணம் தான். யாருக்கும் சிரமமில்லாமல், சடக்கென்று ஏறி படக் கென்று படுத்துக் கொண்டு முகத்தில் ஒரு துண்டை மூடிக் கொண்டு தூக்கத்தைத் தழுவி விடலாம். லோயர் பெர்த்தைப் பொறுத்த வரை ஒரே சிரமம், நாம் பயணம் செய்யும் பெட்டியில் ஒரு பெரியவர் அல்லது பெரியம்மா இருந்தால் தான் வரும். அவர்களுக்கு அப்பர் பெர்த் புக் ஆகியிருக்கும்.யார்டா மாட்டுவார்கள் என்று பரிதாபமாய்க் காத்து இருப்பார்கள். வேறு வழியில்லாமல் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இந்த மிடில் பெர்த் இருக்கே மிடில் பெர்த், ரொம்பக் கொடுமைங்க..!!!
அன்னிக்குத் தான் அதை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைச்சது.
மொத்தம் ஐந்து பேர் இருந்தோம். கிடைச்ச டிக்கெட்டில் 4 பேர் அருகருகேயும், ஒரே ஒருத்தர் அந்தக் கடைசியிலும் இடம் இருந்தது. சரி அங்கு இருப்பவர்களிடம் பேசி யாராவது ஒருத்தரை மாத்திடலாம் என்று திட்டமிட்டுப் போனோம். எங்களைத் தவிர ஒரே ஒரு அழகான பெண். மற்ற எல்லாரும் குடும்ப உறுப்பினர்கள். (3+3+சைடு பெர்த் 3=9 சீட்). குடும்ப உறுப்பினர்கள் மொத்தமாய் மறுத்து விடவே , வேற வழியே இல்லாமல், இருந்த அந்த ஒரே ஒரு அழகான பெண்ணைப் பரிதாபமாகப் பார்த்தோம். அவரும் நிலையை உணர்ந்து, no problem என்று கண்ணியமாக நாங்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டார்.
அப்புறம் தான் தெரிந்தது, அந்தப் பெண் மிடில் பெர்த் என்று. அதற்குள் மற்ற நண்பர்கள் மற்ற இடங்களை ஆக்கிரமிக்க, மீதி இருந்த மிடில் பெர்த்தில் இடம் பெயர்ந்தேன். மெதுவாக பாம்பு போல் நெளிந்து உள்ளே நுழைந்த உடன் படுக்க வேண்டும். படுக்க மட்டுமே வேண்டும் உட்கார முடியாது. உட்கார்ந்தால் தலை மேலே முட்டும். சரி என்று படுத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் தண்ணீர் தாகம் எடுத்தது. எழுந்தேன். பட்டென்று ஒரு இடி தலையில். மேலிருந்த நண்பர் பார்த்து முறைத்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்து தூக்கிக் கூட முடியவில்லை. தண்ணீர் குடிக்க வேண்டி மிடில் பெர்த்தில் இருந்து கீழே இறங்க வேண்டியிருந்தது. பின் மறுபடியும் சைடில் ஏறி பாம்பு போல் ஊர்ந்து அப்பாடா என்று படுத்தேன். சற்று கண்ணயர்ந்து மெல்லக் காலை நீட்டிய ஐந்தாவது நிமிடம் ஒருவர் எக்ஸ்கியூஸ்மீ..!! காலைக் கொஞ்சம் உள்ள எடுங்க..!! என்று முரட்டுத்தனமாகக் காலை ஆட்டி என்னை எழுப்பி அன்பாய் வேண்டுகோள் விடுத்தார். அவ்வளவு தான் தூக்கம் காலி..!!! ஒரு ஐந்து நிமிடம் சீட்டை விட்டு இறங்கி பெட்டியின் இரண்டு பக்கமும் ஒரு நடை நடந்து விட்டு மறுபடியும் பாம்பானேன். இரண்டு கால்களையும் மடித்து சம்மணிட்டு உறங்குவது போல் மடித்தவாறே உறங்க ஆரம்பித்தேன். அதிகாலை 4 மணியிருக்கும். கீழ் பெர்த்தில் இருந்த பெரியவர்கள் இருவரும் எழுந்து விட்டனர். மிடில் பெர்த்தில் இருந்த என்னைத் த்ட்டி எழுப்பி, தம்பி நாங்க கொஞ்சம் உட்காரணும், பெர்த்தைக் கீழே இறக்குங்க என்றார்கள். நானும் பரிதாபமாய், சார் மணி இப்பத்தான் 4 ஆவுது. மதுரை வர இன்னும் இரண்டு , இரண்டரை மணிநேரம் இருக்கே சார்..!! என்றேன். இல்ல தம்பி நாங்க திண்டுக்கலில் இறங்கிடுவோம். அப்போதைக்கு எந்திரிக்க முடியாது, திண்டுக்கல் வந்தது நீங்க கீழ் பெர்த்ல படுத்துக்கங்க என்று ஆறுதலளித்து விட்டு அவர்கள் கதையைப் பேசத் தொடங்கினார்கள். சரி என்று விதியை நொந்த படி மெதுவாய்ச் சாய்ந்து உட்கார்ந்த படியே தூங்க ஆரம்பித்தேன். நானும் திண்டுக்கலில் இறங்கவேண்டியிருப்பதால் அவர்களின் ஆறுதல் வார்த்தை என்னிடம் பலிக்கவில்லை.
தூக்கமற்ற கண்களைக் கசக்கியவாறே சைடு பர்த்தைப் பார்த்தேன். எனக்குச் சிரிப்பு வந்தது. என் நண்பர்களில் என்னை விடச் சற்று தடித்த நண்பன், அதே மிடில் பெர்த்தில் (சைடு மிடில் பெர்த் நரகமுங்க..!!) இறங்க வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக திண்டுக்கல் இறங்கி, வத்தலக் குண்டு வந்து, நண்பர் திருமணத்தில் கலந்து கொண்டேன். 5 நண்பர்களில் மூவர் கொடைக் கானல் செல்ல ஏற்கனவே திட்டமிட்டதால், மீதி இருவர் மட்டுமே மீண்டும் சென்னை திரும்ப வேண்டும். இரவு 7 மணிக்கு வண்டி. ஆறு மணிக்கு டிராவல் ஏஜெண்ட் எனது கைபேசியில் சீட்டுக்களை உறுதி செய்தார். 46 49 என்று.
சரி இப்போது செல்லும் போதாவது நிம்மதியாகத் தூங்கும் படி அப்பர் பெர்த் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றோம். வண்டியில் ஏறி எண்களைத் தேடிப் பார்த்தோம். இரண்டுமே................. மிடில் பெர்த்...!!
4 comments:
உங்களுக்கு யாரோ மிடில் பெர்த் சாபம் குடுத்துட்டாங்க சுரேஷ்.
மிடில் பார்த்தும் கஷ்டம் மிடில் கிளாஸ் வாழ்க்கையும் கஷ்டம்... யாரையாவது அண்டி அனுசரிச்சு தான் இருந்து தொலைக்க வேண்டி இருக்கிறது...
இது மாதிரி நிறைய எழுதுங்க... உங்க எழுத்துக்களில் எங்க சோகத்தை நினைச்சு பாத்துக்கறோம்....:)
நன்றி விக்கி.
நன்றி சதீஷ். நீங்க சொல்றது உண்மை தான்
Hi Suresh!!
It was a nice read.
Middle of anyting is bad. ain't it?
Luckily you did not get the misfortune to travel in Indian Railway's shortlived Side middle berth service. :-)
Btw, இனிய தீபவளி வாழ்த்துக்கள்.
Post a Comment