Wednesday, April 29, 2009

மோதலில் விழுந்தேன் (அ) மருத்துவமனை பயங்கரங்கள் பகுதி 3


எக்ஸ்ரே படத்தைப் பார்த்து விட்டு அந்த மருத்துவர் மெல்ல ஆரம்பித்தார் என் பெயரை விசாரித்து விட்டு " சுரேஷ், உங்களது வலது தோளில் எலும்பு சற்று விலகியிருக்கிறது, மேலும் உங்களது வலது கையில் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. எனவே Plate வைக்க வேண்டும். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ருபாய் வரை ஆகும். உங்களிடம் மெடிக்ளெய்ம் இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்று நான் சொன்னது தான் தாமதம். இந்த ஆபரேஷன் சற்று பெக்குலியர் கிட்டத்தட்ட 75 ஆயிரம் வரை ஆகும் என்று பல்டிஅடித்தார்.

அந்த மருத்துவமனை திநகரின் மையப் பகுதியில், பேருந்து நிலையத்துக்கு வெகு அருகில் இருந்தது. சரி என்று என்னுடைய நண்பர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டு, கத்திப்பாரா அருகில் இருக்கும் அந்தப் பிரபல மருத்துவமனையை நோக்கிச் சென்றேன். ( என் நண்பரின் வண்டியின் பின் சீட்டில் அமர்ந்து தான்)

அங்கு நுழைந்த உடனேயே, கைக் கட்டைப் பார்த்தார்கள். அதுவரை நான் கழற்ற மறந்து போய், என் சட்டையிலேயே தொங்கிய ரிலையன்ஸ் அடையாள அட்டையைப் பார்த்தார்கள். முடிவு செய்து விட்டார்கள். இன்னிக்கு ஒரு நல்ல பார்ட்டி சிக்கிருக்கான் டா என்று,,!!!

இது ஏதுமறியாத நான், பின்னப் பட்ட வலைக்குள் மெதுவாய் நுழைய ஆரம்பித்தேன்.

தலைமை மருத்துவர் என் கை நிலையைப் பார்த்தார். தி.நகர் மருத்துவமனையில் எடுக்கப் பட்ட எக்ஸ்ரேயைப் பார்த்தார். தி.நகரில் கேட்கப் பட்ட அதே கேள்வி,
மெடிக்ளெய்ம் இருக்கிறதா?

இருக்கிறது என்ற வார்த்தை சொல்லி முடிக்கப் படுவதற்குள் நான் வீல் சேரில் ஏற்றப் பட்டேன். எதுக்குங்க, எனக்கு கையில் தான் அடி எதுக்கு வீல் சேரெல்லாம், நான் நடந்தே வரேன் என்றதற்கு, நானே கவனிக்காத, என் கால்சட்டைக் கிழிசலைக் காண்பித்தார்கள். அந்த இடத்திலும் அடி பட்டிருக்கிறது அதையும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு நடுவே எனது மெடிக்ளெய்ம் கார்டை ஒருவர் வாங்கிச் சென்றார். அப்ளிகேஷன் எல்லாம் எழுதி முடித்தார். வலது கையில் சிரமப் பட்டுக் கையெழுத்திட்டதும், செலவு ஒரு இலட்சம் வரையில் ஆகும் என்று சற்றும் முகத்தில் உணர்ச்சியின்றிச் சொன்னார். என்னது ஒரு இலட்சமா, என்னங்க, இது வெறும் ஃப்ராக்சர் தானே, ஒரு இலட்சத்துக்கு என்ன செலவு என்று கேட்டது, உங்களுக்கு வைக்கப் போகும் மெட்டலின் தரம், அது இது என்று ஒரு கதை சொன்னார்கள். மொத்தத்தில் எனது பாலிஸி மொத்தத் தொகையான ஒரு இலட்சத்துக்கும் குறி வைத்து விட்டார்கள் என்று புரிந்து கொண்டேன். ஆரம்ப கட்ட மருந்துகள் கொடுத்து விட்டு, என்னைப் படுக்கையில் படுக்கவிட்டார்கள். என்னிடம் ஃபாரம் எழுதிச் சென்றவர் வந்தார். இன்னும் அப்ரூவல் வரலை. ஆனால் பரவாயில்லை வந்துடும். நம்ம ஆபரேஷன் பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டார்னு சொன்னார்.
எனக்கு திடுக் என்றது. சரி ஆபரேஷன் பண்ணுங்க, ஆனா ஒன்னு எங்கிட்ட சல்லிக் காசு கிடையாது, நீங்க அறுவை சிகிச்சை முடித்ததும், மெடிக்ளெய்ம் அப்ரூவல் வரலைன்னா, நான் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னேன். உடனே அவர் தலைமை மருத்துவருடன் பேசிவிட்டு வருகிறேன் என்று வெளியில் சென்றார். ஒரு அரைமணிநேரம் இருக்கும் தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ் வந்தார்(என்னை மட்டும் பார்க்க :) ) சுரேஷ் ஒன்னும் கவலைப் படாதீங்க, அப்ரூவல் வந்துடும், ஆபரேஷன் செய்துடலாம் என்றார். நானும் அப்ரூவல் வரலைன்னா என்ன செய்றது டாக்டர்னு கேட்டேன். உடனே சரி இன்று இரவு ஆபரேஷன் வைத்துக் கொள்ளலாம் அதற்குள் அப்ரூவல் வரட்டும் என்று சற்று ஏமாற்றமாய்ச் சென்றார். இரவு பத்து மணி வரை அப்ரூவல் வரவே இல்லை

1 comment:

மதிபாலா said...

மைக் டெஸ்டிங்...


NO WORD VERIFICATION PLZZZZZZZZZ ( THANKS - RAJA NATARAJAN SIR)