Tuesday, June 13, 2017

நதியோரம் சதிநேரம் 8

இரவு ..!!! நிலவு பூத்த இரவு ! இத்தனை பிரச்னைகளின் மூல காரணமான ஆரவல்லி நதியில் ஓடை போல் ஓடிக் கொண்டிருந்த நீரில் நிலவின் ஒளி பட்டு இன்னொரு வெளிச்சக் கீற்றைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது ! இரண்டு கொலைகளைப் பார்த்திருந்த அதன் இரு கரைகளும் எதும் நடக்காததைப் போல் இல்லாத காற்றைத் தேடி வரவழைக்க தன் மரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தன ! அசைவேனா பார் என்று மரங்களும் அடையாள வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு அடர் கோடை இரவு !
சரக் ! சரக் ! என்ற சருகுகள் மிதி படும் ஓசை கேட்டது ! அந்தக் கரையின் அடர்ந்த விழுதுகள் கொண்ட ஆலமரத்தின் மறைவில் இருந்து #அவன் வெளிப் பட்டான் !
முழுக்க முழுக்க கருப்பு உடைகள் அணிந்திருந்தான் ! முகம் முழுதும் மறைத்தார் போல் ஒரு தொப்பி அணிந்திருந்தான் ! மெல்ல ஊரை நோக்கிய பாதையில் நடக்க ஆரம்பித்தான் ! ஊரடங்கிய பின் இரவில் அவனை எதிர்கொள்ள ஊரின் நாய்கள் மட்டுமே காத்திருந்தன ! அந்தத் தெருவிற்கு வந்தான் !
மெல்ல அந்த மாளிகை போன்ற வீட்டிற்கு சற்று
தொலைவில் நின்று கவனித்தான் !
அந்த வீட்டுக்குப் பாதுகாவலாய் போடப் பட்டிருந்த இரண்டு காவலர்களும் கடமையே கண்ணாய்க் கண்ணயர்ந்திருந்தனர் ! அவர்களின் கட்டிலின் அடியில் இருந்த காலி பாட்டில்கள் அவர்கள் வெறும் தூக்கத்தில் மட்டும் இல்லை என்று காட்டிக் கொடுத்தன ! அந்த வீட்டின் பின் புறம் சென்றான் ! 10 அடி உயர காம்பவுண்ட் சுவரின் அருகே சென்றான் ! தனது இடுப்பில் சுற்றியிருந்த கயிறை உருவி அதன் முனையில் இருந்த கொக்கியை உள்ளே இருந்த மரத்தைக் குறி வைத்து வீசினான் ! சர் சர் சர்ரென்று மெல்லிய சத்தத்தோடு அந்தக் கொக்கி அங்கிருந்த மரத்தின் கிளையில் மாட்டிக் கொண்டு சுமக்கத் தயார் என்று அறிவித்தது ! அந்தக் கயிறை மெல்ல இழுத்து உறுதி செய்து கொண்டு சட்டென்று ஏறி அதன் அடுத்த பக்கம் குதித்தான் !
அடுத்து அவன் சுண்டிய லாகவமான சுண்டலில் கொக்கி மரக் கிளையில் இருந்து நழுவி இவன் கைகளில் அடக்கமானது ! மெல்ல நடக்க ஆரம்பித்தான் !
ஹெஹெஹெ என்ற மூச்சிரைக்கும் சத்தம் கேட்டு மெல்ல நின்றான் !
அந்த மங்கிய நிலவொளியில் திடீரென்று இரண்டு நட்சத்திரம் போன்ற வெளிச்சப் புள்ளிகள் தோன்றின, அது நான்காகி எட்டாகின !
ஹெஹெஹெ என்ற மூச்சுச் சத்தம் இப்போது அதிகமாகி அவனைச் சுற்றிக் கேட்டது !
அவை
.
.
.
.நான்கு டாபர்மென் வகை நாய்கள் ! கிட்டத் தட்ட 3 .
.
அடி உயரத்தில் அவனைச் சுற்றி நின்றன !
.
.
.
.
அவன் மெல்ல தான் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றினான் !
.
.
.
.
.
.
மெல்ல அமர்ந்து அந்த நாய்களின் தலையைத் தடவினான் ! மெல்ல மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவை போல் அவை நான்கும் அவனருகில் தாவின ! அவற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, தன் பையில் கை விட்டு அந்த பெடிக்ரி ஸ்டிக் அடங்கிய பையை எடுத்தான் ! அவற்றை அந்த நாய்களுக்குக் கொடுத்தான் ! சற்று நேரத்தில் அவை மயங்கி விழுந்தன ! நான்கு நாய்களையும் அநாயசமாகத் தூக்கி அங்கிருந்த மரத்தின் அருகில் போட்டான் ! மெல்ல நடுவே இருந்த வீட்டை அடைந்தான் ! வெளியே கிட்டத் தட்ட ஆறேழு அடியாட்கள் போன்றவர்கள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர் !
அவன் முகத்தில் ஒரு சிறிய புன்னகை எழுந்தது !
அவர்களில் ஒருவனை நெருங்கி அவனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு அந்தச் சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டான் ! ஒரு சாவியைத் தேர்ந்தெடுத்து அந்தத் துளையில் பொருத்தினான் ! க்ளிக் என்று திறந்து கொண்டது !
உள்ளே நுழைந்தான் ! சற்றும் காத்திராமல் அருகில் இருந்த படிகளில் ஏறினான் ! மேல் சென்று அந்த இரண்டாவது அறையை மெல்ல அழுத்தினான் ! திறந்து கொண்டது ! மெல்லிய இரவு விளக்கு வெளிச்சத்தில் ஏசியின் அடர்ந்த குளிரின் நடுவே கழுத்து வரை போர்வையோடு அருணாச்சலம் உறங்கிக் கொண்டிருந்தார் ! அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனது கண்களில் வெறி வந்து அடங்கியது ! தன் பைகளில் கை விட்டு அந்த ஸ்பிரேயை எடுத்து அதன் மூடியை அகற்றினான் ! அருணாச்சலம் அருகே சென்றான் ! தன் முகத்தை ஒரு பெரிய கர்சீப்பால் மூடிக் கொண்டான் ! அவரது அருகில் அமர்ந்தான் ! ஒரு கையால் அவரது வாயை அழுத்தி மூடிக் கொண்டு மூக்கருகில் அந்த ஸ்பிரேயைப் பாய்ச்சினான் ! ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு ! அந்தப் போர்வையை அகற்றி, அருணாச்சலத்தைத் தன் தோள்களில் மிக எளிதாகத் தூக்கிப் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்! மெல்லப் படிகளில் இறங்கி, கதவைப் பூட்டி அவரை ஒரு ஓரமாய் இறக்கி வைத்து விட்டு, அந்தச் சாவிக் கொத்தை மீண்டும் அந்த ஆள் பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு அருணாச்சலத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டின் பின் புறம் விரைந்தான் ! காம்பவுண்ட் சுவர் அருகே வந்து தன் வாயைக் குவித்து மெல்லிய ஓசை செய்தான் ! பின் வாசல் கதவு திறந்தது ! அங்கே இன்னொரு ஆசாமி நின்று கொண்டிருந்தான் ! பின் வாசல் கதவை மீண்டும் பூட்டி விட்டு இருவரும் அருணாச்சலத்தை சுமந்து அங்கே ஓரமாய் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த காரில் ஏற்றினார்கள் ! பின்னர் அந்தக் கார் மெல்ல நகர்ந்து ஒரு வெளிச்சப் புள்ளியாகி மறைந்தது
தொடரும் 8

No comments: